[கவிதை] பெசன்ட் நகர்ப் புலி
எல்லியட் கடற்கரையின் எழில்மிகு மாலை;
எட்டி விலகும் அலை நுரையில்
என் கால் நனைத்து நின்றிருந்தேன்.
இனிய அலைகளின் நடனத்திலே
இளஞ்சிவப்பு விலங்கு ஒன்று
இமையசைக்காது தத்தளித்தது.
கடலோட்டத்தில் மீளாத புலியினைக்
கரைமீட்கப் பிடிக்க முயலாது
களிநடனமெனக் கண்டு களித்தேன்.
காப்பாற்றக் குற்றவுணர்வு முயன்றாலும்,
கடற்கூத்தின் புலியாட்டத்தில் மயங்கி,
கண்ணிற்குச் சுவையெனச் சொக்கியிருந்தேன்.
குழந்தை கவனச்சிதைவால் தவறவிட,
அலையோட்டத்தில் புலி தத்தளிப்பதுபோல்,
வாழ்வோட்டத்தில் மனிதன் தத்தளிக்கிறான்.
அதனைக்
கண்டும் காக்காத கடவுளைப்போல்
கடுமனத்துடன் கடற்மணலில் நின்றிருந்தேன்;
தள்ளாடிய பொம்மைப் புலி
தெற்கு நோக்கி செல்வதைக் கண்டு, களிப்புடன்!